Saturday, July 23, 2011

மாயையை அறிதல்


மாயையை அறிதல்

மாயை என்பது பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்படுகிறது. மாயை என்பது அறியாமை, நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம், மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்று மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல் எல்லாம் எண்ணங்கள் வேரூன்றியிருக்கின்றன.
உண்மையில் மாயையே பிரம்மத்தை அறிவதற்கான திறவுகோலாக உள்ளது.
மாயையானது, அது உள்ளளவும் சாசுவதமானதாகவே உள்ளது. சங்கரரின் கயிறும் பாம்பும் நியாயம் இதைத்தான் சொல்கிறது.
அதாவது கயிறு பாம்பாகத் தெரியும் வரை அது பாம்பாகவே உணரப்படுகிறது. அவ்வாறு உணரும் பரியந்தம் அது வாஸ்தவமாகப் பாம்பாகவே உள்ளது. மட்டுமல்ல. பாம்பாக இருந்ததுதான் கயிறாகவும் உள்ளது. அதாவது இரண்டுமே ஒன்றுதான்.
நமது பார்வையின் தன்மைக்கேற்ப, சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, அது வெவ்வேறாகத் தென்படுகிறது. இதுதான் கயிறு-பாம்பு நியாயத்தின் உட்பொருளாகும்.
இதை இன்னும் விவரித்தால் கயிறு-பாம்பு இரண்டுமே நிஜம், அவையவற்றின் காலப் பிரமாணப் பரியந்தம் அவை நிஜமாக இருக்கும், இருக்க வேண்டும். கனவானது கனவு காணும்வரை தத்ரூபமாகவே உள்ளது. விழிப்பு நிலை வருகையில்தான் கனவு என்பது உறைக்கிறது. விழிப்பு நிலை வராது கனவு நீடிக்கும்வரை அது தன்னளவில் நிஜமான ஒன்றாகவே உள்ளது.
ஏனெனில், மாயை என்பது உறைநிலையில் உள்ள சக்தியைப் போன்று ப்ரம்மத்தின் வெளிப்படாத நிலையே ஆகும். மாயையை பிரம்மத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதால்தான் அது ஒரு வேண்டாத அம்சம்; பிரம்மத்தைக் காணவிடாமல் மறைக்கும் இடையூறு என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன், மம மாயா என்றும் தைவீ மாயா என்றும் இந்த மாயையைப் பற்றிக் குறிப்பிடுகிறான். மம என்றால் என்னுடைய என்றும் தைவீ என்றால் தெய்வீகமான என்றும் பொருள்படும்.
ஏஷா என்றும் மாயைக்கு ஒரு அடைமொழி கொடுக்கிறான். அதாவது புலன்களால் உணரக் கூடியது. கண்களால் காணவும், செவிகளால் கேட்கவும், சருமத்தால் உணரவும்,  மனதால் புரிந்துகொள்ளக் கூடியதுமான மாயை. ஆக, மாயையின் வடிவில் உனக்கு எந்நேரமும் நான் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நமக்கு உறுதி கூறுவதாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.
மாயையை நாம் அன்னையின் வடிவிலேயே உணர்கிறோம். மஹா மாயை என அவளைத் துதிக்கிறோம். ஸ்ரீ க்ருஷ்ணன் பெண்மையின் குணாம்சத்தை வெளிப்படுத்துகையில் அவ்வாறாக அமைகிறான் என இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆணானாலும் பெண்ணானாலும் இருவர் உடம்பிலுமே ஆண்-பெண் ஹார்மோன்கள் இருப்பது, அவற்றின் விகிதாசாரம் அமைவதை ஒட்டியே ஆண், பெண் நிர்ணயம் ஆகிறது. ஆனாலும், பரஸ்பரம் ஆண் பெண் தன்மைகள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் உடற்கூறு விஞ்ஞானம் தெரிவிக்கிறது.
இதேபோல் அவசியமான தருணங்களில் தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளும் ஜீவராசிகளும் உள்ளன. மண்ணுக்கடியில் அடைகாக்கப்படும் நிலையில் உள்ள முதலையின் முட்டைகளுக்குள் வளரும் குட்டிகள் அவையவை வைக்கப்பட்டுள்ள அடுக்குகளின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி எடுக்கின்றன. சில தாவரங்களிலும் ஆண் பெண் தன்மைகள் ஒரு சேர இருந்து எப்போது எது அவசியப்படுகிறதோ அப்போது அது வெளிப்படுவதாக இருக்கிறது. .இவ்வளவும் சொல்லக் காரணம், ஸ்ரீ க்ருஷ்ணனே அவசியம் கருதி மஹா மாயையாகவும் இருக்கிறான் என்பதை நினைவூட்டத்தான்.
மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.
மாயையானது அசுத்தமானது, ஜீவாத்மாக்களுக்கே அது உரித்தானது என்றெல்லாம் எண்ணிப் புறந் தள்ளத் தேவையுமில்லை. அதிலும் இறைச் சக்தி உறைந்து இருப்பதை உணர்த்துவதற்காகத்தான் திருமாலின் செவி அழுக்கிலிருந்து வெளிப்பட்ட அசுரர் கதையைப் புராணம் சொல்கிறது. மேலும் அசுத்தம் அவசியமான உணவாகவும் சில ஜீவராசிகளுக்கு அமைகிறது.
மாயை என ஒன்று இருப்பதால்தான் பிரபஞ்சம் இருக்கிறது. அதன் இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் காரணமாகத்தான் இயற்கையின் மகத்தான சாதனைகளை அனுபவிக்க முடிகிறது.
சரி. இவ்வாறெல்லாம் மாயை செயல்பட வேண்டிய அவசியம் என்ன? இப்படியொரு லீலைக்கு என்ன அவசியம்?
இதற்கு விடை தேடித்தான் மெய்ஞ்ஞானிகள் காலங்காலமாக சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். விஞ்ஞானிகளும்தாம். நாத்திகர்களுக்குப் பிரச்சினை இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று போய்விடலாம்.
மாயை என்பது உறை நிலையில் உள்ள பிரும்மம் என்று ஸ்ரீ க்ருஷ்ணன் உணர்த்தியிருக்கிறான். இதில் உள்ள ஒரு நுட்பமான விஷயம், பிரும்மம் உறைநிலையில் இருக்கும்போதுதான் மாயையாக, சக்தியாக இயங்கி பலவற்றையும் தோற்றுவிக்கிறது !
பிரும்மம் இயக்க நிலையில் இருக்கிறபோது செயலற்றதாக அதாவது ஒருவர் சமாதி நிலையில் இருப்பதுபோல நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது!
முரண்பாடு போலத் தோன்றும் இந்த உண்மையை வார்த்தைகளால் புரியவைப்பது கஷ்டம். என்னை நான் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாதபோது மாயையாக இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷணன் சொல்வதைத்தான் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இறைச் சக்தி தன்னை பகிரங்கமாக வெளிப்படுதிக் கொள்ளாமல் மாயையான பிரபஞ்சத் தோறறங்களின் மூலம் தன் இருப்பை சூசகமாக உணர்த்துகிறது.
இதைப் புரிந்துகொண்டதால்தான் ஞானியர் ஜடப் பொருள் உள்ளிட்ட சகலத்திலும் இறைச் சக்தியைக் காண்கின்றனர். இதில் சுயமும் அடக்கம். மாயை என்று எதையும் தூஷிப்பதில்லை.
அத்வைதம், த்வைதம் இரண்டுமே இதில்தான் வந்து ஒடுங்குகின்றன.
நானே கடவுள் என்பது அத்வைதம் அல்ல. மாயையின் நிலையில் சகலத்திலும் பிரதிபலிக்கும் பிரும்மம் என்னுள்ளும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்தலே அத்வைதம். நீர்த்துளியில் சூரியன் பிரகாசிப்பதுபோல. நீர்த்துளி இருக்கும்வரை சூரியனும் அதில் இருக்கும். நீர்த்துளி உலர்ந்துபோகையில் அதில் உள்ள சூரியனும் மறையும். ஆனால் சூரியன், தொடர்ந்து விண்ணில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்.
மாயா லீலையின் நோக்கம் பரிணாமம் என்றால் பரிணாமத்தின் நோக்கமும் அவசியமும் என்ன என்பது அடுத்த கேள்வியாகும்.
படிப்படியாக முதிர்ச்சிபெற்று இறுதியாக ஆன்மிகத்தில் முழுமையாகத் தோய்தலே அதன் நோக்கமும் அவசியமும் என்றால் அதற்கும்தான் என்ன அவசியம்? பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டு அரும்பாடுபட்டு மேலே ஏறிவரச் செய்யும் விளையாட்டு குரூரமாக அல்லவா இருக்கிறது?
முயற்சி செய், முயற்சி செய், முயற்சி செய்துகொண்டே இரு, அதற்கான பயிற்சியே அது. நீச்சல் பழக வேண்டுமெனில் நீரில் தள்ளிப் பழக்குகிற மாதிரி.
சிரத்தையும் விடா முயற்சியும் இருந்தால் மாயையின் இறுதி நோக்கமும் அவசியமும் மறைந்திருக்கிற பிரபஞ்ச ரகசியம் புரிந்துவிடும். இன்றைய விஞ்ஞானம் அதை நோக்கித்தான் வெகு விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குள் மனிதன் தனது அகந்தையாலும் பேராசையாலும் பொறுப்பினைமையாலும் சூழலை நாசம் செய்து காரியத்தைக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.
மஹா மாயையின் லீலா வினோதங்களை நாம் அனுபவித்து மகிழலாம் (வலி, வேதனைகள் உள்படத்தான்! உடல் நோவையும் பிற துயரங்களையும் அனுபவிக்க நேர்கையில் பெரியவர்கள் தமது கர்ம வினைகள் கரைந்து போவதாகவே அதனைக் கருதி மகிழ்கின்றனர். இறைச் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மற்றவர்கள்தான் இதற்கு மாறாக ஆண்டவனே உனக்குக் கண்ணில்லையா என்று புலம்புகின்றனர்).
அதன் ரகசியம் புரிந்தாலும் பிறருக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. அவரவரும் தாமே முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயமிது. வாதப் பிரதிவாதங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.
ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

Wednesday, July 20, 2011

இருமுடி தத்துவம்


பெற்ற தாயும், தந்தையும் சொத்து சுகத்தை சேர்த்து வைத்தால் தான், பிள்ளைகள், அவர்களை ஏறிட்டுப் பார்க்கும் இந்த கலி காலத்தில், தனக்கு துரோகம் செய்த தாய்க்கு கூட சேவை செய்தவர் சபரிமலை ஐயப்பன். ஆம்! தனக்கு தலை வலிப்பதாகவும், அதற்கு மருந்து புலிப்பால் என்று தாய் நாடகமாடியும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் தன்னை வளர்த்த அவளுக்காக புலிகளைக் கொண்டு வந்தவர் அவர்.
அறுபது ஆண்டுகளுக்கு முன் கூட, கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து சபரிமலைக்கு சென்றவர்கள் ஆயிரம் பேர் கூட இருக்காது; அதற்கு முந்தைய காலங்களில், நூறு பேர் வரை தான் சென்றுள்ளனர். அப்போதெல்லாம் வாகன வசதி இல்லாததால், தாங்கள் புறப்படும் ஊரில் இருந்தே நடந்து சென்று, எருமேலியில் இருந்து பெரிய பாதையில் சென்று வணங்கி வந்தனர் பக்தர்கள்.
இன்று, சபரிமலை சுற்றுலா மையம் போல ஆகிவிட்டது. காலையில் மாலை போடுவது, மாலையில் மலைக்குச் சென்று விடுவது, பம்பைக்குச் சென்ற பிறகு, அங்கு மாலை அணிவது, அதையும், இருமுடியையும் காட்டி, 18ம் படியில் ஏறுவது என முறையற்ற விதத்தில் ஐயப்பனை வழிபடச் செல்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் மிகப்பெரிய தியாகி. 12 வயது வரையே வாழ்வதென விரதம் எடுத்து, சாஸ்தாவின் அவதாரமாக பூமிக்கு வந்தவர். ராஜசேகர பாண்டியன் என்ற சாஸ்தா பக்தர், தனக்கு சாஸ்தாவே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். அவருக்கு அருள்பாலித்த சாஸ்தா, கலியுகத்தில், ஐயப்பன் என்ற பெயரில் அவரது பிள்ளையாவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த பிறவியில் பந்தள மன்னராக பிறந்தார் ராஜசேகரன். காட்டுக்கு வேட்டை யாடச் சென்ற மன்னருக்கு பிள்ளையாகக் கிடைத்தார் சாஸ்தா. குழந்தையில்லாத மன்னர், அவரது கழுத்தில் கிடந்த மணியைப் பார்த்து, “மணிகண்டன்என்ற பெயர் சூட்டி வளர்த்தார். மணிகண்டன் வந்த நேரத்தில், மன்னருக்கும் குழந்தை பிறந்து விட்டது; இருந்தாலும், தனக்கு பின், மணிகண்டனுக்கே முடிசூட்ட விரும்பினார் மன்னர்.
இதை விரும்பாத சிலர், ராணியிடம் அவளுக்கு பிறந்த மகனுக்கே முடிசூட்டும்படி வலியுறுத்தினர். ராணியும் மனமாற்றமடைந்து, ஐயப்பனை காட்டுக்கு அனுப்பி, புலிப்பால் கொண்டு வர பணித்தாள்.
சிவ, விஷ்ணுவின் பிள்ளையான சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பனுக்கு இந்திரனும், மற்ற தேவர்களும் புலியாக மாறி அவருடன் வந்து உதவினர். யாராலும் செய்ய இயலாத இந்த அற்புதத்தைக் கண்டு நடுங்கிப் போன ராணியும், ராஜாவும் அவர் யார் என கேட்க, அவர் சாஸ்தாவாக காட்சி தந்தார்.
தான் வந்த கடமை முடிந்து விட்டதாகச் சொல்லி, சபரிமலைக்குச் சென்று தவத்தில் அமர்ந்து விட்டார். அவர் இருந்த இடத்தில் பந்தள மன்னர் ஒரு கோவில் கட்டினார்.
தன் வளர்ப்புத் தாய்க்காக தியாகம் செய்தவரும், தன் பக்தனின் கோரிக்கைக்காக அவருக்கே பிள்ளையாக வந்தவருமான மணிகண்டனைக் காண நாமெல்லாம் செல்ல வேண்டும். குறிப்பாக, முதன் முதலாக கோவிலுக்குச் செல்லும் கன்னி சுவாமிகள், கார்த்திகை முதல் தேதி மாலையணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜையன்று அங்கிருக்குமாறு செல்ல வேண்டும்; மற்றவர்கள், கார்த்திகையில் தங்களுக்கு வசதிப்படும் நாளில் சென்று வரலாம்.
அங்கு சென்று வந்தபிறகு, மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடாமல், நாம் பெற்ற விரதப் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் ஐயப்பனின் பேரருள் நமக்கு கிடைக்கும். சுவாமியே! சரணம் ஐயப்பா!
***
எண் திசை சாஸ்தா!
சிதம்பர நடராஜர் ஆலயத்தில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். எட்டுத் திசைகளிலும் அத்தலத்தை சாஸ்தா வலம் வருகிறார் என்பது ஐதீகம். அந்த எண்திசை சாஸ்தாவின் பெயர்கள்: மகா சாஸ்தா, ஜகன்மோக சாஸ்தா, பால சாஸ்தா, ராக சாஸ்தா, தர்ம சாஸ்தா (ஐயப்பன்), விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
***
இருமுடி கட்டாமல்
சபரிமலையில், இருமுடி கட்டாமல் 18 படி ஏற ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், பந்தளம் அரச குடும்பத்தின் வாரிசுகள். பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். மகனை பார்க்க பெற்றோருக்கு அனுமதி தேவையில்லை என்பதால், நேரடியாக 18 படிகளின் மீது ஏறி ஐயப்பனை தரிசிக்க இவர்களுக்கு விதிவிலக்கு உள்ளது.
***
இருமுடி தத்துவம்!
பரம்பொருளான பரமாத்மாவிடமிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மா, மீண்டும் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதே ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு செல்லும்போது இருமுடி கட்டுவதன் தத்துவம்.
இருமுடி சுமந்து, காட்டுப் பாதையில் நடக்கையில், நமது புண்ணிய மூட்டையாக கருதப்படும் பகவானுக்குரிய முன் முடி அப்படியே இருக்கும். வழிப்பயணத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பின் முடி மட்டும் நமது பாவ வினைகள் கரைவது போல குறைந்து கொண்டே வரும். நாம் சேர்த்திருக்கும் புண்ணியங்கள் பயன்படுவது போல, நாம் சுமந்து வந்த இருமுடியில் புண்ணியமூட்டையான முன் முடி, நாம் கொண்டு வந்த பொருட்கள் குருசாமி கையால் பிரித்தெடுக்கப்பட்டு, நெய் அபிஷேகம் உட்பட அனைத்து அபிஷேக ஆராதனைகளும் ஐயப்பனுக்கு செய்விக் கப்படுகின்றன. இதுவே ஸ்ரீசபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவதன் தத்துவம்.