Wednesday, July 20, 2011

இருமுடி தத்துவம்


பெற்ற தாயும், தந்தையும் சொத்து சுகத்தை சேர்த்து வைத்தால் தான், பிள்ளைகள், அவர்களை ஏறிட்டுப் பார்க்கும் இந்த கலி காலத்தில், தனக்கு துரோகம் செய்த தாய்க்கு கூட சேவை செய்தவர் சபரிமலை ஐயப்பன். ஆம்! தனக்கு தலை வலிப்பதாகவும், அதற்கு மருந்து புலிப்பால் என்று தாய் நாடகமாடியும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் தன்னை வளர்த்த அவளுக்காக புலிகளைக் கொண்டு வந்தவர் அவர்.
அறுபது ஆண்டுகளுக்கு முன் கூட, கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து சபரிமலைக்கு சென்றவர்கள் ஆயிரம் பேர் கூட இருக்காது; அதற்கு முந்தைய காலங்களில், நூறு பேர் வரை தான் சென்றுள்ளனர். அப்போதெல்லாம் வாகன வசதி இல்லாததால், தாங்கள் புறப்படும் ஊரில் இருந்தே நடந்து சென்று, எருமேலியில் இருந்து பெரிய பாதையில் சென்று வணங்கி வந்தனர் பக்தர்கள்.
இன்று, சபரிமலை சுற்றுலா மையம் போல ஆகிவிட்டது. காலையில் மாலை போடுவது, மாலையில் மலைக்குச் சென்று விடுவது, பம்பைக்குச் சென்ற பிறகு, அங்கு மாலை அணிவது, அதையும், இருமுடியையும் காட்டி, 18ம் படியில் ஏறுவது என முறையற்ற விதத்தில் ஐயப்பனை வழிபடச் செல்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் மிகப்பெரிய தியாகி. 12 வயது வரையே வாழ்வதென விரதம் எடுத்து, சாஸ்தாவின் அவதாரமாக பூமிக்கு வந்தவர். ராஜசேகர பாண்டியன் என்ற சாஸ்தா பக்தர், தனக்கு சாஸ்தாவே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். அவருக்கு அருள்பாலித்த சாஸ்தா, கலியுகத்தில், ஐயப்பன் என்ற பெயரில் அவரது பிள்ளையாவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த பிறவியில் பந்தள மன்னராக பிறந்தார் ராஜசேகரன். காட்டுக்கு வேட்டை யாடச் சென்ற மன்னருக்கு பிள்ளையாகக் கிடைத்தார் சாஸ்தா. குழந்தையில்லாத மன்னர், அவரது கழுத்தில் கிடந்த மணியைப் பார்த்து, “மணிகண்டன்என்ற பெயர் சூட்டி வளர்த்தார். மணிகண்டன் வந்த நேரத்தில், மன்னருக்கும் குழந்தை பிறந்து விட்டது; இருந்தாலும், தனக்கு பின், மணிகண்டனுக்கே முடிசூட்ட விரும்பினார் மன்னர்.
இதை விரும்பாத சிலர், ராணியிடம் அவளுக்கு பிறந்த மகனுக்கே முடிசூட்டும்படி வலியுறுத்தினர். ராணியும் மனமாற்றமடைந்து, ஐயப்பனை காட்டுக்கு அனுப்பி, புலிப்பால் கொண்டு வர பணித்தாள்.
சிவ, விஷ்ணுவின் பிள்ளையான சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பனுக்கு இந்திரனும், மற்ற தேவர்களும் புலியாக மாறி அவருடன் வந்து உதவினர். யாராலும் செய்ய இயலாத இந்த அற்புதத்தைக் கண்டு நடுங்கிப் போன ராணியும், ராஜாவும் அவர் யார் என கேட்க, அவர் சாஸ்தாவாக காட்சி தந்தார்.
தான் வந்த கடமை முடிந்து விட்டதாகச் சொல்லி, சபரிமலைக்குச் சென்று தவத்தில் அமர்ந்து விட்டார். அவர் இருந்த இடத்தில் பந்தள மன்னர் ஒரு கோவில் கட்டினார்.
தன் வளர்ப்புத் தாய்க்காக தியாகம் செய்தவரும், தன் பக்தனின் கோரிக்கைக்காக அவருக்கே பிள்ளையாக வந்தவருமான மணிகண்டனைக் காண நாமெல்லாம் செல்ல வேண்டும். குறிப்பாக, முதன் முதலாக கோவிலுக்குச் செல்லும் கன்னி சுவாமிகள், கார்த்திகை முதல் தேதி மாலையணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜையன்று அங்கிருக்குமாறு செல்ல வேண்டும்; மற்றவர்கள், கார்த்திகையில் தங்களுக்கு வசதிப்படும் நாளில் சென்று வரலாம்.
அங்கு சென்று வந்தபிறகு, மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடாமல், நாம் பெற்ற விரதப் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் ஐயப்பனின் பேரருள் நமக்கு கிடைக்கும். சுவாமியே! சரணம் ஐயப்பா!
***
எண் திசை சாஸ்தா!
சிதம்பர நடராஜர் ஆலயத்தில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். எட்டுத் திசைகளிலும் அத்தலத்தை சாஸ்தா வலம் வருகிறார் என்பது ஐதீகம். அந்த எண்திசை சாஸ்தாவின் பெயர்கள்: மகா சாஸ்தா, ஜகன்மோக சாஸ்தா, பால சாஸ்தா, ராக சாஸ்தா, தர்ம சாஸ்தா (ஐயப்பன்), விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
***
இருமுடி கட்டாமல்
சபரிமலையில், இருமுடி கட்டாமல் 18 படி ஏற ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், பந்தளம் அரச குடும்பத்தின் வாரிசுகள். பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். மகனை பார்க்க பெற்றோருக்கு அனுமதி தேவையில்லை என்பதால், நேரடியாக 18 படிகளின் மீது ஏறி ஐயப்பனை தரிசிக்க இவர்களுக்கு விதிவிலக்கு உள்ளது.
***
இருமுடி தத்துவம்!
பரம்பொருளான பரமாத்மாவிடமிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மா, மீண்டும் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதே ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு செல்லும்போது இருமுடி கட்டுவதன் தத்துவம்.
இருமுடி சுமந்து, காட்டுப் பாதையில் நடக்கையில், நமது புண்ணிய மூட்டையாக கருதப்படும் பகவானுக்குரிய முன் முடி அப்படியே இருக்கும். வழிப்பயணத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பின் முடி மட்டும் நமது பாவ வினைகள் கரைவது போல குறைந்து கொண்டே வரும். நாம் சேர்த்திருக்கும் புண்ணியங்கள் பயன்படுவது போல, நாம் சுமந்து வந்த இருமுடியில் புண்ணியமூட்டையான முன் முடி, நாம் கொண்டு வந்த பொருட்கள் குருசாமி கையால் பிரித்தெடுக்கப்பட்டு, நெய் அபிஷேகம் உட்பட அனைத்து அபிஷேக ஆராதனைகளும் ஐயப்பனுக்கு செய்விக் கப்படுகின்றன. இதுவே ஸ்ரீசபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவதன் தத்துவம்.

No comments:

Post a Comment